உலகம் முழுவதுமுள்ள தொழில்நுட்ப ஆர்வலர்கள், பயன்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்த புதிய ஐபோன்கள், வாட்ச் ஆகியவற்றை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடக்கும் வருடாந்திர விழாவில் ஆப்பிள் நிறுவனம் தனது திறன்பேசியான ஐபோன், கையடக்ககணினியான ஐபாட், ஸ்மார்ட் வாட்சான ஆப்பிள் வாட்ச் போன்ற பல்வேறு தயாரிப்புகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் கூபர்டினோவில் கட்டப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் புதிய, பிரம்மாண்டமான தலைமையகத்திலுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் புதன்கிழமை நள்ளிரவு வரை நடந்த இந்த வருடத்துக்கான தயாரிப்புகளின் அறிமுக கூட்டத்தில் அந்நிறுவனத்தின் புதிய ஐபோன்களான 10 எஸ், 10 எஸ் மாக்ஸ், 10 ஆர், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச்செயலதிகாரியான டிம் குக்கும், அணியினரும் அந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி அவற்றின் சிறப்பம்சங்களை விளக்கினர்.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் குறித்த முக்கிய தகவல்களை காண்போம்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4
பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் மிகப் பிரபலமான தயாரிப்பாக ஐபோன்கள் பார்க்கப்பட்டாலும், இந்த வருடத்தை பொறுத்தவரை ஸ்மார்ட் வாட்ச்களின் சிறப்பம்சங்களே ஆச்சர்யத்தை அளித்ததாக கருதப்படுகிறது.

40மிமீ, 44 மிமீ ஆகிய இரண்டு அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4இன் திரை அதன் முந்தைய பதிப்புகளை விட பெரியதாகவும், எட்ஜ் டூ எட்ஜ் வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

கடந்த மே நடந்த ஆப்பிளின் வருடாந்திர தொழில்நுட்பவியலாளர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட புதிய இயங்குதளமான வாட்ச்ஓஎஸ் 5இல் இது இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17ஆம் தேதி வெளியிடப்படவுள்ள இந்த புதிய இயங்குதளத்தை ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1 (2016), ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 2 மற்றும் முந்தைய வருடம் வெளியிடப்பட்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 பயன்பாட்டாளர்களும் பெறுவார்கள்.

முந்தைய ஆப்பிள் வாட்ச் சீரிஸ்களில் அழைப்புக்களை செய்யும்/ ஏற்கும், குறுஞ்செய்தி செய்யும்/ பார்க்கும், மேப்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், ஒருவர் நடக்கும் தொலைவு, இதய இயக்கம், உடற்பயிற்சிகள் உள்ளிட்ட உடலியக்கங்களை காண முடிந்து வந்தது.

இந்நிலையில், உலகிலேயே முதல் முறையாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4இல் இதுவரை மருத்துவமனைகளில் மட்டுமே காண முடிந்த ஈசிஜி எனப்படும் இதய துடிப்பலை அளவி வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களது இதய துடிப்பில் அசாதாரண மாற்றம் இருந்தால் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வசதியும், அவசர உதவியை அழைக்கும் தெரிவும் உள்ளது.


மூன்று நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4இன் ஜிபிஎஸ் பதிப்பு 399 டாலர்களுக்கும், எல்டிஇ பதிப்பு 499 டாலர்களுக்கும் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் விற்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன்

வாடிக்கையாளர்கள் திருப்தியில் உலகின் முன்னணி திறன்பேசியாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான தயாரிப்பான ஐபோனின் புதிய பதிப்புகளான ஐபோன் 10 எஸ், 10 எஸ் மாக்ஸ், 10 ஆர் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பதிப்புகளிலும் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறைக்கான பிரத்யேக ஏ12 பயோனிக் என்றழைக்கப்படும் 7 நானோ மீட்டர் அளவே கொண்ட அதிவேக சிப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய பதிப்புகளை விட 50 சதவீதம் வேகமாகவும் குறைந்த பேட்டரியை பயன்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கை விட அதிக ஊதியம் பெறும் இந்தியர்
புதிய ஐபோன்களை விற்க பழைய ஐபோன்களின் வேகத்தை ‘ஆப்பிள்’ குறைத்ததா?
மங்கலான புகைப்படங்களை கூட தெளிவாக்கி பார்க்கும் எச்டிஆர் சென்சார் (உணரி), மேம்படுத்தப்பட்ட பேஸ்ஐடி என்னும் முகத்தை பயன்படுத்தி திறன்பேசியை இயக்கும் தொழில்நுட்பம், கைபேசிகளில் முதல்முறையாக புகைப்படம் எடுத்தபிறகும் கூட அதன் டெப்த்தை மாற்றிக்கொள்ளும் வசதி, நீடிக்கப்பட்ட பேட்டரி திறன், ஆகுமென்டட் விளையாட்டுகள் – பயன்பாடுகள், தண்ணீர் புகா வடிவமைப்பு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.


குறிப்பாக ஐபோன் வரலாற்றில் முதல்முறையாக இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த புதிய ஐபோன்கள் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் சிம்மை எப்போதும்போல பயன்படுத்தும் வகையிலும், இரண்டாவது சிம்மை இசிம்மாக பயன்படுத்தி கொள்ளும் வகையில் இது வடிவைக்கப்பட்டுள்ளது.

முறையே 5.8 அங்குல திரையையும், 6.5 அங்குல திரையையும் கொண்டுள்ள ஐபோன் 10 எஸ் மற்றும் ஐபோன் 10 எஸ் மாக்ஸின் பின்பக்கத்தில் 12எம்பி திறனுடைய இரண்டு கேமெராக்களும், முன்புறத்தில் 7எம்பி திறனுடைய கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. கிரே, சில்வர், கோல்ட் ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐபோன் 10 எஸ்ஸின் தொடக்க விலை 99,000 ரூபாய் என்றும், ஐபோன் 10 எஸ் மாக்ஸின் தொடக்க விலையாக 109,900 ரூபாய் ஆகும். இவை இரண்டுமே இம்மாதம் 28ஆம் தேதியன்று இந்தியாவில் வெளியாகிறது.

ஐபோனின் சிறப்பம்சங்களை சற்றே குறைந்த விலையில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த முறை மூன்றாவதாக ஐபோன் 10 ஆர் என்ற புதிய திறன்பேசியையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 6.1 அங்குல திரையை கொண்டுள்ள இது ஐபோன் 10 எஸ் பெற்றுள்ள அநேக சிறம்பம்சங்களை பெற்றுள்ளதுடன், கூடுதலாக வெள்ளை, கறுப்பு, மஞ்சள், சிவப்பு, கோரல் ஆகிய நிறங்களில் அக்டோபர் 26ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படுகிறது. இதன் தொடக்க விலையாக 76,000 ரூபாய் ஆகும்.

மற்ற முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

படத்தின் காப்புரிமைAPPLE
ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து இயக்கங்களும் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஐபோனின் மொத்த விற்பனை 200 கோடியை தொடவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச்செயலதிகாரி டிம் குக் தெரிவித்தார்.

ஐபோன் மற்றும் ஐபாடுகளின் இயங்குதளமான ஐஓஎஸ்ஸின் 12வது பதிப்பும், ஆப்பிள் டிவிஓஎஸ் 12, வாட்ச்ஓஎஸ் 12 ஆகியவை வரும் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் கணினியான ஐமேக் மற்றும் மடிமேற்கணினியான மேக்புக்கின் மேக்ஓஎஸ் மொஜாவே என்னும் புதிய பதிப்பு வரும் 24ஆம் தேதி வெளியிடப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *