ஹாங்காங் ஜூஹாய்- மக்காவ் பாலம்: உலகின் நீளமான கடற் பாலம்- புகைப்படங்களில்
23 அக்டோபர் 2018
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க
உலகின் நீளமான கடல் பாலத்தை இன்று சீனா திறந்துள்ளது.
இதற்கும் வெள்ளை யானைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?
இருபது பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், அதாவது இந்திய ரூபாயில் தோராயமாக 146,000 கோடி மதிப்பில் கட்டுப்பட்டுள்ள இந்த பாலத்தைதான் ‘வெள்ளை யானை’ என்று விமர்சிகர்கள் விமர்சிக்கிறார்கள்.
வெள்ளை யானை என்ற பதம் விலையுயர்ந்த ஆனால் தேவைப்படாத பொருளைதான் வெள்ளையானை என்று கூறுவார்கள்.
ஒன்பது ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த பாலம் ஹாங்காங்கையும் சீனாவையும் இணைக்கிறது.
இன்று இந்த பாலத்தை சீன அதிபர் ஷி ஜின்பிங் திறந்து வைத்தார்.
4 லட்சம் டன் எஃகு கொண்டு இந்த பாலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதாவது 60 ஈஃபில் கோபுரம் கட்ட எவ்வளவு எஃகு தேவைப்படுமோ அந்த அளவு இது.
இந்த பாலத்தின் மொத்த நீளம் 55 கி.மீ. இதில் 30 கி.மீ பாலம் கடலுக்கு மேலே உள்ளது.
நிலநடுக்கம், சூறாவளி ஆகிய சூழலிலும் தாக்குப்பிடிக்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைகப்பட்டிருக்கிறது.
ஒரு நாளைக்கு 9200 வாகனம் இந்த பாலத்தில் பயணிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த பாலத்தில் செல்ல சில சிறப்பு அனுமதிகளை வாங்க வேண்டும்.
இந்த பால கட்டுமானத்தின் போது நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர். 18 பேர் மரணம் அடைந்தனர்.
இது கடல் வளத்தை நாசப்படுத்தும் என சூழலியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பிபிசி சீன சேவையின் மதிப்பீட்டின்படி, ஆண்டுக்கு 86 மில்லியன் டாலர்கள் சுங்கத்தின் மூலம் வருவாய் ஈட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நிபுணர்கள், இதில் முதலீடு செய்யப்படும் தொகை எப்போதும் திரும்ப வரப் போவதே இல்லை. இது ஒரு வெள்ளை யானை என்கிறார்கள்.