மானியத்துடன் கிடைக்கும் மத்திய அரசின் கடன் திட்டங்கள்!

மானியத்துடன் கிடைக்கும் மத்திய அரசின் கடன் திட்டங்கள்! புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் முதல் ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்திவருபவர்கள் வரை பலதரப்பட்டவர்களுக்கும் பல்வேறு கடன் திட்டங்களை மத்திய மாநில அரசுகள் வழங்கிவருகின்றன. இதில் பல விதமான மானியங்களும் வழங்கப்படுகின்றன. ஆனால், இது தெரியாமல் பல பேர் மீட்டர்வட்டி, கந்து வட்டி என கடன் வாங்கி தொழிலிலும், வாழ்க்கையிலும் தேவையில்லாத சிக்கலை சந்திக்கின்றனர்.

அப்படிப்பட்டவர்களுக்கு வழிகாட்டும் விதமாகவே தொடர்ந்து இந்தப் பகுதியில் நாம் பல்வேறு கடன் திட்டங்களையும் மானிய விவரங்களையும் வழங்கிவருகிறோம். மத்திய அரசு வழங்கும் கடன் திட்டங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் கிரெடிட் லிங்க் கேபிடல் சப்சிடி ஸ்கீம் (Credit Linked Capital Subsidy Scheme – CLCSS), ஸ்பெஷல் கிரெடிட் லிங்க் கேபிடல் சப்சிடி Special Credit Linked Capital Subsidy Scheme (SCLCSS) ஆகிய இரண்டைப்பற்றி இனி பார்ப்போம்…

கிரெடிட் லிங்க் கேபிடல் சப்சிடி ஸ்கீம் (Credit Linked Capital Subsidy Scheme – CLCSS)

கிரெடிட் லிங்க் கேபிடல் சப்சிடி ஸ்கீம் (Credit Linked Capital Subsidy Scheme – CLCSS) என்பது மத்திய அரசின் கடன் திட்டம். இதில் பதிவு பெற்ற உற்பத்தி செய்யும் (Manufacturing) எல்லா தொழில்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். இந்தத் திட்டத்தில் ஒரு தொழில்முனைவோர் புதியதாகவோ அல்லது தாங்கள் நடத்திவரும் தொழிலில் விரிவாக்கம் மாற்றம் மற்றும் மேம்பாடு செய்யும்போது தாங்கள் வாங்கும் எந்திரத்தின் மதிப்பில் 15% மானியமாக பெறலாம். இது புதிய தொழில்நுட்பத்துடன்கூடிய எந்திரங்களுக்கு மட்டும் பொருந்தும்.

ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் இந்தத் திட்டம் இந்த ஆண்டும் (2018-19) நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் திட்டத்துக்கான தொழில் உற்பத்தி சார்ந்த தொழிலாக இருக்க வேண்டும். தொழிற்சாலையும் பதிவு (உத்யோக் ஆதார்) பெற்றிருக்க வேண்டும். இது தனிநபர் / பங்குதாரர் / கம்பெனி என எல்லோருக்கும் பொருந்தும். டெக்னாலஜி அப்கிரேடேசன் அதாவது, நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எந்திரங்கள் வாங்க வேண்டும். இந்த எந்திரங்களின் பட்டியல் இத்திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த எந்திரங்களின் பட்டியலில் இல்லாதபட்சத்தில் புதிய தொழில்நுட்பத்துடன்கூடிய எந்திரமாக இருந்தால் அதற்கான சான்றுடன் விண்ணபிக்கலாம்.இந்தத் திட்டத்தில் ரூ.1 கோடி வரை வாங்கும் எந்திரங்களுக்கு மட்டும் மானியம் உண்டு. அதாவது, ரூ.15 லட்சம் வரை மானியம் பெறலாம். இந்தத் திட்டம் குறு மற்றும் சிறுதொழில் முனைவோருக்கு கிடைக்கும். இதில் SC/ST தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் ஆரம்பிக்கும் தொழில்களுக்கான ஒரு ஹப் National SC-ST Hub (NSSH) உள்ளது.

இந்த அமைப்பு SC/ST தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் ஆரம்பிக்கும் தொழில்களுக்கு உறுதுணையாக இருக்கும். இப்போது புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள், கம்பெனிகள் (PSU) தங்களுக்கு தேவையான உதிரிப் பாகங்களை குறு மற்றும் சிறுதொழில் முனைவோரிடம் வாங்க வேண்டும். அதிலும் கண்டிப்பாக 20% வரை வாங்க அரசு நிர்ணயம் செய்துள்ளது. இப்போது அந்த 20 சதவீதத்திலும்கூட 4% கண்டிப்பாக தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் நடத்தும் தொழிற்சாலைகளிலிருந்து வாங்க உத்தரவிட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களின் கருத்துகளையும் உள்ளடக்கி தாழ்த்தப் பட்ட மலைவாழ் மக்கள் நடத்தும் உற்பத்தித் துறை தொழில்களுக்கு ஸ்பெஷல் கிரெடிட் லிங்க் கேபிடல் சப்சிடி வழங்க அரசு புதிய திட்டம் கொண்டுவந்துள்ளது.

ஸ்பெஷல் கிரெடிட் லிங்க் கேபிடல் சப்சிடி (Special Credit Linked Capital Subsidy Scheme – SCLCSS)

இத்திட்டத்தின்படி புதிய அல்லது விரிவாக்கம் செய்யும் எல்லா உற்பத்தித் துறை தொழில்களுக்கும் வாங்கும் அனைத்து எந்திரங்களுக்கும் 25% மானியமாக வழங்க உள்ளது. சுற்றுப்புறச் சூழ்நிலை மாசுபடுத்தும் சிவப்பு வகை பட்டியலில் உள்ள தொழில்களுக்கு மானியம் கிடையாது.
இந்த மானியம் பெறும்போது வேறு எந்த மானியமும் பெறப்பட்டிருக்கக்கூடாது. இது முழுக்க முழுக்க வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களிலிருந்து கடனாக பெறப்பட்டிருக்க வேண்டும். சிறுதொழில் மத்திய (Small to Medium) தொழிலாக மாற்றம் செய்திருந்தாலும் இந்த மானியம் பெறலாம்.

இந்த மானியத் திட்டம் 25% அல்லது ரூபாய் 25 லட்சம் வரை மட்டும் பெற முடியும். அதாவது, ரூபாய் ஒரு கோடி வரை எந்திரங்களில் முதலீடு செய்திருக்க வேண்டும். இந்தத் திட்டம் 31.3.2020 வரை அல்லது ஒதுக்கப்பட்ட நிதி உள்ளவரை செயல்பாட்டில் இருக்கும். இதன் அடுத்த கட்டம் பிறகு அறிவிக்கப்படும்.

இதில் யாரெல்லாம் பயனடையலாம்?

இதில் தனிநபர் முதலாளி, பங்குதாரர் கம்பெனி, கூட்டுறவு சங்கம் போன்றவர்கள் உத்யோக் ஆதார் பதிவு பெற்று தொழில் நடத்துபவர்கள்.
தனிநபர் – SC / ST
பங்குதாரர் – SC / ST 51% பங்கு
கம்பெனி – SC / ST 5% பங்கு

இந்தத் திட்டம் DC(MSME)-ன் திட்டமாகும். திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் சிட்பி (SIDBI) மற்றும் நபார்டு வங்கியாகும். மேலும் SBI, CANARA BANK, BANK OF BARODA, PNB, BOI, ANDRA BANK, TIIC முதலிய நிறுவனங்களும் உதவி பெறலாம். இந்தத் திட்டம் அரசு வங்கிகள் தனியார் வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் மாநில நிதி நிறுவனங்கள் அளிக்கும் கடனுக்கு மானியம் பெறலாம் . வங்கிகளின் பட்டியல் தனியாக இந்தத் திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கேபிடல் சப்சிடி 25% மானியம் வாங்கும் எந்திரங்களின் மதிப்பில் தரப்படும்.

இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக இந்தக் கடன் பெறும் நிறுவனங்கள் எந்திரங்களுக்கான காலக் கடன் மட்டும் பெற்றிருத்தல் கூடாது. இவை தங்கள் தொழிலை நடத்த தேவையான நடைமுறை மூலதனத்தையும் (Working Capital) வங்கிகள் இந்த நிறுவனங்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். இதில் முதலீட்டாளர் பங்கு, சொத்துப் பிணையம் பங்குதாரர் பங்கு விகிதம் முதலியன கடன் கொடுக்கும் நிறுவனங்களின் வழக்கப்படி இருக்கும். இந்தத் திட்டத்தில் இடம்பெற கடன் வழங்கும் நிறுவனங்கள் சிட்பி மற்றும் நபார்டு வங்கியிடம் ஒப்பந்தம் செய்திருத்தல் வேண்டும். கடன் வழங்க இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை அவர்கள் அளித்து மானியத்தை பெற்றுத் தரவேண்டும்.

வங்கிகள் இந்தத் திட்டதில் ஆன்லைன் முறைப்படியும் பதிவு செய்யலாம். விண்ணப்பத்தின் நிலையை மானிட்டர் செய்யலாம். இந்த இரண்டு திட்டங்களும் புதிய மற்றும் தொழில் மேம்படுத்துதல் விரிவாக்கம் ஆகியவற்றிற்கு பயன்படும். மேலும் இத்திட்டம் பற்றிய விவரங்களுக்கும் மற்றும் தொழில் திட்ட அறிக்கைகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் 044 – 2225208 / 82 / 83 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்.
நன்றி
தொகுப்பு: திருவரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *