சாதிக் கயிறு விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி.கூறிய தகவல்கள்.

“நெல்லை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக பள்ளி மாணவர்கள் தங்கள் சாதி அடையாளத்தைக் காட்டும் வகையில் கைகளில் சாதிக் கயிறு கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகின்றனர்.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் கையில் சாதிக் கயிறு கட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி கையில் கயிறு கட்டி வரும் மாணவர்கள் சம்பந்தபட்ட பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களால் கண்காணிக்கப்படுகின்றனர்,” என்று தெரிவித்தார் சுபாஷினி.

மேலும் இது பற்றிக் கூறிய அவர், “அம்பாசமுத்திரம் அடுத்துள்ள பள்ளக்கால் அரசு பள்ளியில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் இருவரிடமும் கையில் கட்டியிருந்த கயிற்றை அகற்றச் சொல்லி ஆசிரியர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் அவர்கள் அதனை கேட்காமல் தொடர்ந்து கையில் சாதிக் கயிறுகளை கட்டி வந்து பிரச்சனை செய்தனர்.

மாணவர் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கல்வித் துறை உத்தரவை மீறி கையில் கயிறு கட்டி பள்ளிக்கு வரும் மாணவர்கள் கையிலிருந்து கயிறு அகற்றப்படுகிறது. இருப்பினும் சில மாணவர்கள் தாங்கள் சீருடைகளில் குறிப்பிட்ட வண்ணங்களை ஏதோ ஒருவகையில் ஒட்டிக்கொள்கின்றனர்.

உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் காலை, மாலையில் மாணவர்கள் கொண்டுவரும் புத்தகப் பைகளையும் சோதனை செய்து அதில் சாதி அடையாளங்களுடன் இருக்கும் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.

நாளை மறுநாள் பொதுத்தேர்வு நடக்க உள்ளதால் பொது தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து மற்று மாணவர்களின் பெற்றோருடனான ஒரு விழிப்புணர்வுக் கூட்டம் அந்தந்த பள்ளிகளில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, ”பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. மாணவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்தில் பள்ளிக்கல்வித்துறை உள்ளது,” என்று தெரிவித்தார்.

“தற்போது படிப்பறிவு அதிகரித்த நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது. திருநெல்வேலியில் சாதிக் கயிறு கட்டியதில் ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விசாரணை நடந்து வருகிறது.

அனைவருக்கும் சமத்துவமான அரசாக இந்த அரசு இருந்து வருகிறது. மாணவர்களும் சமத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபடாமல் இருப்பதற்கு அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்படும்.

இரண்டு ஆண்டுகள் உள்ள மன அழுத்தத்தின் காரணமாக மாணவர்கள் மோதிக்கொண்டார்களா? ஹீரோசத்தில் மோதிக் கொண்டார்களா? சமூகத்தில் நடந்த சில சம்பவங்களை பார்த்து கற்றுக் கொண்டார்களா? என கேள்வி எழுந்துள்ளது என்றும் மகேஷ் கூறினார்.

இது மாதிரியான சம்பவங்களை தடுக்க யுனிசெஃப் மூலம் 2.50 லட்சம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 1,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுளது.” என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *