தமிழகப் பள்ளிப் கல்வியில், பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நவீன தொழில்நுட்பத்தில், வகுப்பறைகள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ‘டேப்லெட்’ என்ற, கையடக்க கணினியுடன் பாடம் கற்றுத்தர திட்டமிடப்பட்டு, 3,000 பள்ளிகளுக்கு தலா, 10 வீதம், 30 ஆயிரம், ‘டேப்லெட்’ வாங்க ‘டெண்டர்’ விடப்பட்டது.

இந்நிலையில், டேப்லெட் வழங்குவதற்கு பதில், வகுப்பறைகளில் கணினியுடன் இணைந்த ஸ்மார்ட் வகுப்பை தொடங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, ‘எல்மோ’ என்ற நிறுவனத்துடன் தமிழக அரசு பேச்சு நடத்தியுள்ளது. முதல் கட்டமாக ஐந்து அரசுப் பள்ளிகளில் கணினியுடன் இணைந்த ஸ்மார்ட் வகுப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னையில், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஒரு வகுப்பறையில், இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு கேமராவுடன் இணைந்த ஸ்கேனர் கருவி, டிஜிட்டல் எழுது கருவி, வீடியோ ரெக்கார்டர், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உரையாடல்களை, ஒரு மாதம் வரை சேமித்து வைக்கும் வசதியுள்ள ஸ்மார்ட் கருவி போன்றவை செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது வீடியோ ரெக்கார்டர் மற்றும் புகைப்பட கேமராவை பயன்படுத்தலாம். ஆசிரியர் முன் கேமராவை திருப்பினால், அவர் பாடம் நடத்துவதை திரையில் பார்க்கலாம். அதேபோல, புத்தகத்தில் உள்ள சில வரிகளையோ, படங்களையோ மாணவர்களுக்கு உதாரணம் காட்ட வேண்டுமென்றால், கேமராவில் காட்டினால் அது, திரையில் பெரிதாக தெரியும்.
நன்றி குங்குமச்சிமிழ் கல்வி – வேலை வழிகாட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *