அரசு பள்ளிகளில் படித்து, 7.5 சதவீத சிறப்பு உள்இடஒதுக்கீட்டின் மூலம் தொழிற் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான ஆணைகளை முதல்வர் நேற்று வழங்கியதுடன், இந்த மாணவ – மாணவிகளின் கல்வி, விடுதி, கலந்தாய்வு கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத சிறப்பு உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதில், தேர்வான மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கி பேசியதாவது: தமிழக, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் உயர் கல்வி நிலையங்களுக்குள் நுழைய வேண்டும்.

கிராமப்புறங்களில் இருப்பவர்கள் நகர்ப்புறங்களில் இருக்கும் மிகப்பெரிய கல்வி நிலையங்களில் வந்து சேர வேண்டும். அதற்கான ஏராளமான திட்டங்களை திமுக ஆட்சி அமையும்போதெல்லாம் செய்து கொண்டு இருக்கிறோம். மருத்துவம், பொறியியல் படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள் நுழைய, நுழைவுத்தேர்வு தடையாக இருந்தது. அதை அறிந்து அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் நுழைவு தேர்வை ரத்து செய்தார். இன்று நீட் தேர்வுக்கு எதிராக நம்முடைய அரசு ஒரு சட்டப்போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது. சமூகநீதி உத்தரவுகளால்தான் சமநிலை சமுதாயம் அமைப்பதற்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கிறவர்களில் 69 சதவீதம் பேர் கிராமப்புற மாணவர்கள்தான். அந்த வகையில் பார்த்தால் கிராமப்புற கல்வி மேம்பாட்டு திட்டமாக இது அமைந்திருக்கிறது.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற உயர் கல்வி படிப்புக்கெல்லாம் மாணவர்களுடைய சேர்க்கையில் 7.5 சதவீதம் இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய இந்த அரசால் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. அந்த அடிப்படையில்தான் நீங்கள் கல்வி சாலைக்குள் நுழைகிறீர்கள். அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி, ஊராட்சி ஒன்றிய, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கள்ளர் சீர்திருத்த பள்ளிகள், வனத்துறை மற்றும் அரசு துறையினால் நிர்வகிக்கும் பிற பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற போகிறார்கள்.

நடப்பு கல்வியாண்டில் இந்த சிறப்பு உள்ஒதுக்கீடு மூலம் பொறியியல் படிப்புகளில் சுமார் 10 ஆயிரம் அரசு மாணவர்கள் பயன்பெறுவார்கள். அரசு பள்ளியில் படித்த சுமார் 350 மாணவர்கள் வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டப்படிப்புகளில் பயன்பெறுவார்கள். இந்த மாணவர்கள் மூலம் அவர்களின் குடும்பமும், அவர்களின் ஊரும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளது. இதன்மூலம் அவர்களின் தலைமுறை நிமிர்ந்து நிற்க போகிறது.
அதன்மூலம் இந்த மாநிலமும் பயன் அடைய போகிறது.

நாட்டுக்கு பெருமை பெற்று தருபவர்களாக நீங்கள் வளர வேண்டும். கல்வி ஆணையை கொடுத்து ஒரு தலைமுறையை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வதன் மூலமாக கிடைக்கும் பெருமை மிகப்பெரிய பெருமை. அந்த பெருமையை பெற்றுள்ள உயர் கல்வி அமைச்சர் பொன்முடி மற்றும் துறை அதிகாரிகளை பாராட்டுகிறேன். இதன்மூலம் தமிழ் சமுதாயம் முழுமையான முன்னேற்றம் அடைய அடித்தளம் அமைக்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு நான் தயாராகி காத்துக் கொண்டிருந்த நேரத்தில் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதில் ஒரு மாணவரிடம் பேட்டி கேட்கிறார்கள், அந்த மாணவர், என்னுடைய படிப்பை எப்படி முடிக்கப்போகிறேன் என்கிற கவலையை தெரிவித்து, மாணவர் மட்டுமல்ல ஒரு மாணவியும் சொல்கிறார். அவர்களுடைய பெற்றோர்கள் மட்டுமல்ல, அவர்களுடைய கவலைகளையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய தாயுள்ளம் கொண்ட அரசாக நம்முடைய அரசு இப்போது திகழ்ந்து கொண்டிருக்கிறது, அந்த கோரிக்கையை கேட்டுவிட்டுதான் இந்த நிகழ்ச்சிக்கே வந்தேன். அந்த வகையில், இங்கே நான் இப்போது ஒரு அறிவிப்பு வெளியிடுகிறேன்.

இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தொழிற்படிப்புகளில் கல்லூரியில் சேரக்கூடிய மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் மனம் மகிழக்கூடிய வகையில் ஒரு செய்தியை, ஒரு அறிவிப்பை மகிழ்ச்சியோடு நான் வெளியிடுகிறேன். அது என்னவென்றால், அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற்கல்லூரிகளில் சேரும் மாணவர்களுடைய கல்வி கட்டணம், விடுதி கட்டணம், ஏன் கலந்தாய்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் இந்த அரசு ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் இறையன்பு, உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தமாக 12,500 மாணவர்கள் பயன் பெறுவார்கள். இதற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* உயர் கல்வியின் பொற்காலம்
பெருந்தலைவர் காமராஜர் காலம் என்பது, பள்ளி கல்வி துறையின் பொற்காலமாக இருந்தது. அதை இன்றைக்கும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். அதேபோல, கலைஞர் ஆட்சி காலம் கல்லூரி கல்வியின் பொற்காலமாக விளங்குகின்றது. இந்த ஆட்சி காலம் உயர் கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்னும் சில ஆண்டுகள் கழித்து, எங்கோ ஒரு ஊரில் என்னை சந்தித்து, நீங்கள் கொடுத்த அரசாணையால்தான் நான் கல்வி பெற்றேன், மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறேன், சொந்தமாக தொழில் செய்கிறேன் அப்படி நீங்கள் சொல்கிறபோதுதான் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைவேன் என்று முதல்வர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *